வல்லமையுள்ள ஜெபத்திற்குரிய கோட்பாடுகள்
Principles of Powerful Prayer – TAM
“அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா.5.16)
யாக்கோபு.5.17-ம் வசனம் நமக்கு சொல்லுகிற காரியம், “எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும்…” இருப்பினும் வேதாகம சரித்திரத்தில் நாம் பார்க்கும்போது ஆண்டவருடைய வல்லமையை மிகவும் அற்புத விதமாக நிரூபித்து காண்பித்ததில் எலியாவின் பங்களிப்பு வியக்கத்தக்கதாயிருக்கிறது. (யாக்கோபு.5.16-18; 1இராஜாக்கள்.17.17-24; 18.16-46)
அவிசுவாசிகள், எதிரிகள், அரசியல் தலைவர்கள் என பல வித்தியாசப்பட்ட மக்களை கையாள்வதற்கு எலியாவால் எப்படி முடிந்தது? எலியாவை பயன்படுத்தினது போலவே, இப்பொழுதும் எப்படிப்பட்ட மனிதனை தேவனால் பயன்படுத்த முடியும்? எலியா தேவனோடு வைத்திருந்த நெருக்கத்தையும், ஆண்டவருடைய மகத்துவமான வல்லமையை அனுபவிப்பதற்கும் ஆறு கோட்பாடுகள் எலியாவிடம் இருந்தது. அவற்றுள் இன்று நாம் மூன்று கோட்பாடுகளை பார்ப்போம்.
முதலாவதாக, ஒரு விதவைத் தாய்க்கு எலியாவினுடைய பதில், எலியா தன் சுயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஆண்டவரை தன் வாழ்க்கையில் பொறுப்பெடுத்துக்கொள்ள அனுமதிக்கிற செயல் நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. விதவைத் தாய் அவரிடத்தில் தன் வார்த்தைகளால் பேசும்போது, எலியா தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளவோ அல்லது அவளுக்கு வேதாகமத்தை கற்றுக்கொடுப்பதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை. அவர் அவளுடைய மகனை தனது கைகளில் எடுத்துக்கொண்டு அவளுக்கு உதவ முயற்சிக்கிறார். தன்னுடைய மகனின் இழப்பினிமித்தமும், அவளுடைய புறமத நம்பிக்கையினால் அவள் சுமக்கும் குற்ற உணர்ச்சியிலிருந்து பேசுகிறாள் என்பது எலியாவிற்கு நன்கு தெரிந்திருந்தது. அவளுடைய தவறான சிந்தனைகளை எலியா சுட்டிக்காட்டாமால், தேவன் அவளுடைய வாழ்க்கையை கிரியை நடப்பிக்க அனுமதித்தார்.
இரண்டாவதாக, எலியா தன்னுடைய தனிப்பட்ட ஜெப நேரத்தில் மாத்திரமே தேவனிடத்தில் தன் கேள்வியை கேட்கிறார். எலியா தேவனோடு மிகவும் நெருக்கமாக நடந்தார். அந்த வாலிபனின் மரணத்தின் துக்கத்தின் வாயிலாக தேவன் தன்னோடு பேச விரும்பி அழைக்கிறார் என்பதை எலியா நன்கு அறிந்திருந்தார். இருப்பினும், எலியா ஆண்டவரோடு தனித்து இருக்கும் தன்னுடைய கேள்வியை கேட்பதற்கு காத்திருந்தார். ஏற்கனவே போராடிக்கொண்டிருந்த விதவையினிடத்தில் இருந்த நம்பிக்கையை அவர் தனது சொந்த கேள்விகளைக் கொண்டு மேலும் பெலவீனப்படுத்தவில்லை.
மூன்றாவதான, எலியா தன்னுடைய ஊக்கமான ஜெபத்தில் விடாப்பிடியாக இருந்தார். மரித்த அந்த மகனின் மீது மூன்று முறை விழுந்து ஜெபித்தார். இந்த சூழ்நிலையை கையாள்வதற்கு எலியாவினிடத்தில் எந்த விதிமுறைகளும் இல்லை அதனால் அவர் தன்னுடைய அழுத்தத்தை ஜெபத்தில் தந்துகொண்டிருந்தார்.
ஜெபம்: ஆண்டவரே, எலியாவினுடைய வாழ்க்கைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த மூன்று கோட்பாடுகளையும் நான் என்னுடைய தனிப்பட்ட அன்றாட ஜெப வாழ்க்கையில் அப்பியாசப்படுத்திக்கொள்ள எனக்கு நீர் உதவிசெய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.